Thursday, December 12, 2013

தவற விட்ட வாய்ப்பு



அப்போது நான் திருச்சியில் ஒரு தனியார் ஹாஸ்டலில் தங்கி எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். அந்த வருடம் எங்கள் ஹாஸ்டலில் நிறைய இலங்கை தமிழ் மாணவர்கள் சேர்ந்து படித்துக்கொண்டிருந்தார்கள். இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து தமிழ்நாடெங்கும் பெரும் அலை உருவாகி இருந்த காலம் அது. விடுதலை புலிகள் அப்போது தமிழ்நாடு முழுவதும் பல கண்காட்சிகள் மற்றும் கூட்டங்களை நடத்திக்கொண்டிருந்தார்கள். எங்கள் ஹாஸ்டலில் இருந்த இலங்கை தமிழ் மாணவர்களில் மதிவாணன் என்பவர் என்னுடன் மிக நட்புடன் பழகி வந்தார். மதிவாணன் என்னை விட நான்கு அல்லது ஐந்து வயது மூத்தவர். நான் வயதில் சிறியவனாக இருந்தாலும் மதிவாணன் என்னிடம் மிக ஈடுபாட்டுடன் அரசியல் விஷயங்களை பகிர்ந்து கொள்வார். எங்கள் பேச்சு பல நேரங்களில் இலங்கை பிரச்சினை பற்றியதாகவே இருந்தது. மதிவாணன் பல விடுதலை புலிகள் தோழர்களிடம் தொடர்பு வைத்திருந்தார். நான் ஓரளவிற்கு ஓவியம் வரைவேன் என்பதால்  விடுதலை புலிகளின் கண்காட்சிக்கான விளம்பரங்கள் வரைய நான் உதவ முடியும் என்று மதிவாணன் நினைத்தார். அதன் விளைவாக திருச்சி தில்லை நகரில் தங்கி இருந்த சில புலிகளை மதிவாணனுடன் சென்று நான் சந்தித்தேன். ஒரு சில விளம்பர பலகைகளையும் எழுதினேன். அப்போது குட்டி மணி, ஜெகன் மற்றும் பல தமிழ் போராளிகளின் கொலைகள் பற்றிய செய்திகள் அனைத்து தமிழ் உள்ளங்களிலும் பெரிய புயலை உண்டாக்கி இருந்தது. நானும் அதற்கு விதிவிலக்கல்ல. அந்த சமயத்தில் தமிழகத்தின் பள்ளி மாணவர்களுக்கான ஓவிய போட்டியில் நானும் கலந்து கொண்டேன். "இலங்கை தமிழர்களின் நிலை" என்பதுதான் ஓவியத்தின் தலைப்பு. ஒரு மிகப்பெரிய பூட்ஸின் அடியில் நசுங்கிக்கிடக்கும் எறும்புகள் போல தமிழர்கள் கிடப்பதாக நான் வரைந்த ஓவியத்திற்கு மாநில அளவில் இரண்டாம் பரிசு கிடைத்தது.

ஒரு நாள் மதிய உணவிற்குப்பின் (ஞாயிற்றுக்கிழமை என்று ஞாபகம்) நான் உறங்கிக்கொண்டிருந்தேன். திடீரென என்னை யாரோ உலுக்கி எழுப்பினார்கள். எதிரே மதிவாணன். "சதா, வா போகலாம்" என்றார். தூக்கம் கலையாத குரலில் "எங்கே?" என்று கேட்டேன். "பிரபாகரன் வந்திருக்கிறார். போய் பார்த்திட்டு வரலாம் வா" என்றார். "யாரு....?" என்னால் சற்று ஊகிக்க முடிந்தாலும் கேட்டேன். மதிவாணன் "அவர்தான்" என்பது போல தலையாட்டினார். மதிவாணனுடன் சில இலங்கை தமிழ் மாணவர்களும், இந்திய தமிழ் மாணவர்களும் நின்று கொண்டிருந்தார்கள். ஏதோ என் மனதில் ஒரு தேவையற்ற பிடிவாதம் அந்த நேரத்தில் தோன்றியது. அசந்து உறங்கிகொண்டிருந்தவனை எழுப்பி விட்டார்களே என்ற கோபமாய் இருக்கலாம். "நான் வரல. நீங்க போங்க" என்று சொல்லி விட்டேன். மதிவாணன் சற்று ஏமாற்றம் அடைந்தவராக "சீக்கிரம் வந்திடலாம் வா" என்று கூப்பிட்டார். "நான் வரல" என்று சற்று உரக்க சொல்லி விட்டு நான் திரும்பி படுத்துக்கொண்டேன். ஓரிரு வினாடிகள் என்னை பார்த்தவாறு இருந்த அனைவரும் சட்ரென்று கிளம்பி சென்று விட்டார்கள். மாலை திரும்பி வந்த அனைவரும் புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களை பார்த்து வந்தது பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். அன்று எனக்கு இருந்த பிடிவாதமும் சோம்பலும் ஒரு அரிய வாய்ப்பை நழுவ விட்டுவிட காரணமாய் இருந்தன. இன்று வரை பல நேரங்களில் அதை நினைத்து நான் வருத்தப்படுவதுண்டு.

ஒரு காலகட்டத்தில் நாம் நழுவ விடும் வாய்ப்புகள் அந்த காலத்தில் நமக்கு தெரிவதில்லை. நமது அறிவு விரிவடையும் போதும், நழுவ விட்ட வாய்ப்புகளின் மதிப்பு பின்னர் தெரியும் போதும் நமக்கு அது புரியும். இப்போது கூட நாம் கண் முன்னே பல அரிதான விஷயங்களை பார்த்தும் அதன் அருமை புரியாமல், உணராமல் இருக்கலாம். அப்படி புரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்களே ஒரு தலைவனாக, வழி நடத்துபவனாக உருவெடுக்கிறார்கள் .ஒரு சாதாரண மனிதனுக்கும், ஒரு தொலைநோக்கு பார்வை உள்ளவனுக்கும் அதுவே வித்தியாசம்.

Sunday, July 28, 2013

என்னை தூங்க விடுங்கள்!

என்னை தூங்க விடுங்கள்!

நினைவுகளை மறக்கவே அதிகம்
நித்திரையில் ஆள்கிறேன் நான்.
தாலாட்டாய் எனக்காக
இரவு இசைக்கும் மௌன ராகம்.
விடியலை நோக்கி தொடரும்
என் விழி மூடிய பயணம்.
கனவுகளில் தெரியும் கலங்கலான காட்சிகள்
கண்கள் திறந்தவுடன் மறந்து போகும்.
விழிப்பின் மயக்கத்தில் எப்போதும்
கடந்தவைக்கும் கற்பனைக்கும் இடையில்
மனம் மயங்கியே கிடக்கும்.
கனவிலே கலங்கலான காட்சிகள், விழிப்பிலே தெளிவற்ற காட்சிகள்.
எது இங்கு உண்மை?
கனவா? விழிப்பா?
எனக்குள் எழுந்த கேள்விகள் தேடிப்பார்த்த போது
பதில்கள் அறியாமைப்போர்வைக்குள் ஒளிந்து கொண்டன.
நினைவுகள் என்றும் நித்தியமில்லை, தெரியும் எனக்கு.
நித்திரை, மீளாத நித்திரை மட்டுமே இங்கு நிச்சயம்.
எனவேதான் அடிக்கடி ஒத்திகை பார்க்கிறேன் நான்.
என்னை தூங்க விடுங்கள்!

Thursday, June 27, 2013



Dedicated to frightening sand trucks

மணல் லாரியர்கள் -
அவர்கள்
மரணத்தின் கேரியர்கள்
யமதர்மராஜனின் கூரியர்கள்
மக்கள் தொகை குறைக்கும் வாரியர்கள்
ரத்தத்தில் படம் செய்யும் ஓவியர்கள்
கண் மூடி வண்டி ஓட்டும் ஜாலியர்கள்
கத்தியின்றி கொலை செய்யும் பாவியர்கள்
அவர்கள் கைகளிலே
சாலையெங்கும் அப்பாவியர்கள் !

I don't think nobody takes it personally ;-)