Sunday, July 28, 2013

என்னை தூங்க விடுங்கள்!

என்னை தூங்க விடுங்கள்!

நினைவுகளை மறக்கவே அதிகம்
நித்திரையில் ஆள்கிறேன் நான்.
தாலாட்டாய் எனக்காக
இரவு இசைக்கும் மௌன ராகம்.
விடியலை நோக்கி தொடரும்
என் விழி மூடிய பயணம்.
கனவுகளில் தெரியும் கலங்கலான காட்சிகள்
கண்கள் திறந்தவுடன் மறந்து போகும்.
விழிப்பின் மயக்கத்தில் எப்போதும்
கடந்தவைக்கும் கற்பனைக்கும் இடையில்
மனம் மயங்கியே கிடக்கும்.
கனவிலே கலங்கலான காட்சிகள், விழிப்பிலே தெளிவற்ற காட்சிகள்.
எது இங்கு உண்மை?
கனவா? விழிப்பா?
எனக்குள் எழுந்த கேள்விகள் தேடிப்பார்த்த போது
பதில்கள் அறியாமைப்போர்வைக்குள் ஒளிந்து கொண்டன.
நினைவுகள் என்றும் நித்தியமில்லை, தெரியும் எனக்கு.
நித்திரை, மீளாத நித்திரை மட்டுமே இங்கு நிச்சயம்.
எனவேதான் அடிக்கடி ஒத்திகை பார்க்கிறேன் நான்.
என்னை தூங்க விடுங்கள்!